சேலம்: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சேலத்தில் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தொகுதி களில் பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநில சிறப்பு பொதுக் குழுவில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதில் தமிழகம் மற்றும் இந்தியாவின் நலன் கருதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பொதுக் குழு வழங்கியிருக்கிறது. மேட்டூர் உபரி நீர் திட்டத்தை மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்த மளிக்கிறது. கர்நாடக அரசு மேகே தாட்டு அணையை கட்ட முயற்சிக்கும் நடவடிக்கையையும், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என கேரள ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டிருப்பதையும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை அனுசரிக்கும் சூழலில், தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மருத்துவர், நடிகர் என யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யார் கட்சி தொடங்கினாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செய்ய வேண்டும். புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, நடிகர் விஜய் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வர வேணடும்.
இயற்கை பேரிடரால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநில அரசு கோரும் ரூ.37 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்கி உள்ளது. அந்த வகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நேரடியாக நிதி வழங்க வேண்டும். சேலம் பெரியார் பல்கலைக் கழக முறைகேடுகளை முறையாக விசாரிக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம். செந்தில் பாலாஜியை எந்த காரணத்துக்காக இவ்வளவு நாளாக அமைச்சராக வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
கல்வி, சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்திருந்தால் நீட் பிரச்சினை வந்து இருக்காது. தகுதியான மருத்துவர்களையும், மருத்துவத் துறையை வணிக மயமாக மாற்றக் கூடாது என்ற நோக்கத்தில் நீட் தேர்வு கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலைய பணிகளை செய்து முடித்த பிறகு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பசுமைப் பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு வேறு எந்த செயல்பாடும் வரக் கூடாது. அப்படி வந்தால் களத்தில் நின்று போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார். உடன் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், வன்னியர் சங்க நிர்வாகி கார்த்தி, மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் உள்பட பலர் உடனிருந்தனர்.