தமிழகம்

சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு

செய்திப்பிரிவு

சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாதக்ற குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அப்துல்லா முத்தலீப், 18-ம் தேதி சாகுல்அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளில் ஒருவரான கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. டெல்லியில் இருந்து சென்னை வந்த தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படையினர் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

அன்சார் மீரான் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தியபடி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் சிலர் சிரியா செல்லவும் உதவியுள்ளார். காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்ததும் இவர்தான்.

பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அன்சார் மீரானை என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அன்சார் மீரானிடம் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று (14-ம் தேதி) விசாரணை நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT