சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இன்னொருபுறம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, அதை கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத்தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் தலைமையில் விலை கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
அரிசி விலை உயர்வுக்கான காரணம், அதன் பற்றாக்குறைதான் என்பது தெளிவாக தெரியும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் விற்க அரசு முன்வர வேண்டும்.