ஈரோட்டில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேசினார் அமைச்சர் முத்துசாமி. உடன், தமிழ்நாடு வணிகர்கள் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா மற்றும் நிர்வாகிகள். 
தமிழகம்

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் கடனுதவி வழங்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார். வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர்ப் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நேற்று விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பேரணி நடந்தது.

இதில், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர்விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வியாபாரிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. வணிகர்களின் நலன், மேம்பாட்டுக்காக எந்த அறிவிப்பும் இல்லை. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டியில் மாற்றங்கள் உள்ளிட்ட வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாதத்தில் அகற்றுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். ஆனால், இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சோலார் பயன்படுத்துவோருக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும், ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால், யாருக்குத் தரப்போகிறார்கள் என்றுதெரியவில்லை. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான வியாபாரிகள், வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சென்னையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில், பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT