திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் பி.சுனிதா. இவர், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் விதிகளை மீறி பல்வேறு தலைப்புகளின் கீழ் பெறப்படவேண்டிய வரி வருவாய் இனங்களை ஊராட்சிக்கு முறையாக ஈட்டாமலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் செலவினம் மேற்கொண்டுள்ளார்.
அதன் மூலம், பி.சுனிதா ஊராட்சி நிதிக்கு ரூ.19 லட்சத்து 42 ஆயிரத்து 171 இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இந்த காரணங்களுக்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பி.சுனிதாவை 31.01.2024 முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் து. கீதா. இவர், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளை மீறி கட்டிட வரைப்பட அனுமதி வழங்கி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், து.கீதா முறையாக ஊராட்சி கூட்டங்களை கூட்டாமல், முறையற்ற வகையில் தீர்மானம் இயற்றியுள்ளார். ஊராட்சி கணக்குக்கு வரவேண்டிய தொகையை காலதாமதமாக செலுத்தியுள்ளார்.
இந்த காரணங்களுக்காக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் து.கீதாவை 31.01.2024 முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.சுனிதா பாமகவை சேர்ந்தவர் என்பதும், து.கீதா அதிமுகவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.