தமிழகம்

“மக்களை பிளவுப்படுத்தும் அரசியலுக்கு எதிரான விஜய்யின் கருத்தால் மகிழ்ச்சி” - கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

சென்னை: “மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திரைப்படத் துறையில் செல்வாக்குமிக்கவராக கலைப்பணி ஆற்றும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT