தமிழகம்

“விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஏனெனில்...” - ஆளுநர் தமிழிசை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால், விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “மத்திய இடைக்கால பட்ஜெட் இது. நல்ல பட்ஜெட். இதை முழு பட்ஜெட் போல் எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். பெண்களுக்கு பல நல்லத் திட்டங்கள் தந்துள்ளனர். இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. மக்களுக்கு நல்லது செய்யும் பட்ஜெட். ஆட்சி முடிவதால் அச்சமான நிலையில் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளதை கேட்கிறீர்கள். ஸ்டாலினை பொறுத்தவரை, பிரதமர் மோடி வெளிநாடு போனபோது குறைச்சொன்னார்கள்.

மாநிலத்தை சேர்ந்தவரே வெளிநாட்டுக்கு இத்தனை முறை செல்லவேண்டியுள்ளது. எல்லா மாநிலத்துக்கும் முதலீடு ஈர்க்க பிரதமர் எத்தனை முறை வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். அந்த நல் உறவுகளால்தான் இந்தியாவுக்கு பல நாடுகளின் நல் உறவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்துள்ள சில விஷயங்களால் அச்சத்துடன் உள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பில் மதம், சாதி இல்லாத சூழலை உருவாக்குவதாக கூறியுள்ளதை கேட்கிறீர்கள். யாரும் மதம், சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. அதிகமானோர் அரசியலுக்கு வரவேண்டும். நான் கல்லூரிக்கு சென்றாலும், படிப்பவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும் என தெளிவாக சொல்வேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்துக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நிறைய தலைவர்கள் வரவேண்டும்.

திமுக வெல்லும்போது வாக்கு இயந்திரம் வைத்துதான் வென்றார்களா? அதன்பிறகு வாக்குசீட்டா? வாக்கு இயந்திரமா? வாரிசுக்கோ, குடும்பத்துக்கு மட்டுமோ பாஜகவில் வாய்ப்பு தருவதில்லை” என்றார். நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, “முடிவு செய்து விட்டு சொல்கிறேன். ஆளுநர் பதவி தொடர்வதா தேர்தலா என்று முடிவு செய்து சொல்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT