சென்னை: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நகர்வு, தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்கள்தான் இறுதி எஜமானர்கள் அவர்கள் அதை முடிவு செய்வார்கள். ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாத என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக, பாஜகவுக்குதான் பொருந்தும். அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவின் ஓட்டுகளை யாரும் பிரிக்க முடியாது.
நான் நடிகர் விஜய்யை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இனிமேல் எம்ஜிஆர் போல ஒருவர் பிறக்க முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி. அந்த தெய்வப் பிறவி மாதிரி சித்தரித்துவிட்டால் அவர்களுக்குதான் அது வீழ்ச்சி.
திமுக என்பது ஒரு தீய சக்தி. அந்த திமுக தமிழகத்தை கபளீகரம் செய்துவிட்டது. தமிழகத்தை தீய சக்தியிடம் இருந்து மீட்க ஒரு கட்சி தேவை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இயக்கம் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்தும், தற்போதும் ஓர் எழுச்சியுடன் இருக்கிறது. அவர் போட்ட விதைதான் இன்று ஆலமரமாக பல்வேறு நபர்களுக்கு நிழல் கொடுத்திருக்கிறது. எங்களுடைய இயக்கத்தை மற்ற எந்த இயக்கத்துடனும் ஒப்பிட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும்” என்றார் ஜெயக்குமார்.