தமிழகம்

பணிப்பெண்ணை திமுக எம்எல்ஏ மகன் துன்புறுத்திய விவகாரம்: தமிழகம் முழுவதும் 82 இடத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 82 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக, அவர்களது வீட்டில் பணிபுரிந்த, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் புகார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையும், திமுக அரசையும் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பி.தங்கமணி, பி.வி.ரமணா, பா.பென்ஜமின், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், சி.விஜயபாஸ்கர், பா.வளர்மதி, தளவாய் சுந்தரம், கே.வி.ராமலிங்கம், சோமசுந்தரம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, ஓ.எஸ்.மணியன் மற்றும் கட்சி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் அவரவர் பகுதிகளில் தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று ஒரே நாளில் மொத்தம் 82 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுக அரசுக்கு எதிராகவும், பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வட சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ முன்னிலையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் நடந்த சம்பவத்துக்கு இதுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT