திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றவழக்கில் கைதான மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, கடந்த 2 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டிச.1-ம் தேதி லஞ்ச ஒழிப்புபோலீஸாரால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, டிச. 4-ம் தேதி ஜாமீன் கேட்டு திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடியானது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஜாமீன் கேட்டு அங்கித் திவாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.