ராஜேஷ்தாஸ் | கோப்புப் படம் 
தமிழகம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: நீதிமன்றத்தில் தானே வாதாடினார் முன்னாள் சிறப்பு டிஜிபி

செய்திப்பிரிவு

விழுப்புரம்: கடந்த 2021-ம் ஆண்டில் பெண்எஸ்.பி.க்கு முன்னாள் சிறப்புடிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல்தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும், புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்துநிறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்துதீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 22-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, முன்னாள் சிறப்புடிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை.

அவரது தரப்பு வழக்கறிஞர் ஆதிசங்கர் ஆஜராகி, விசாரணையை கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கான உத்தரவு வரும் வரைதங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க காலஅவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கலா ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபிராஜேஷ்தாஸ் ஆஜராகி, ‘இந்த வழக்கில் நானே வாதாட அனுமதிஅளிக்க வேண்டும்’ என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதை நீதிபதி பூர்ணிமா ஏற்றுக்கொண்டதையடுத்து, ராஜேஷ்தாஸ் ஒரு மணி நேரம் வாதாடி, தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்தார். இதையடுத்து, வரும்7-ம் தேதி வரை வாதாட ராஜேஷ்தாஸுக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT