சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமுல்லைவாயிலை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த மனு: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நெட்வொர்க் பிரச்சினை இருப்பதால், செல்போன், இணைய தள சேவையை தடையின்றி பயன்படுத்த முடியவில்லை.
குறிப்பாக, காணொலி காட்சி விசாரணையின்போது தடை ஏற்படுகிறது. அதேபோல, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் காணொலி காட்சியில் மற்றொரு நீதிமன்றத்தில் குறித்த நேரத்துக்கு ஆஜராக முடிவதில்லை. காஸ் லிஸ்ட், வழக்குகளின் தன்மை, தினமும் பதிவேற்றம் செய்யப்படும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றை பார்க்க முடியவில்லை.
உயர் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் பயன்பாடு முன்பைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டதால், அதற்கேற்ப தனியார் நெட்வொர்க் திறனை மேம்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கடந்த 2023 ஜூலை, செப்டம்பரில் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்தது ‘‘இந்த கோரிக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.