சென்னை: ஆவடி ரயில் நிலையத்தை 4-வது முனையமாக தரம் உயர்த்தி,அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரதராஜ புரம் நலமன்றங்களின் கூட்ட மைப்பு சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் வெ.ராஜசேகரன், பொதுச் செயலாளர் டி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர்தெற்கு ரயில்வே பொது மேலா ளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்கள் உள்ளடங்கிய ஆந்திரா, தெலங் கானா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து விரைவு ரயில்கள் (எக்ஸ்பிரஸ்) மற்றும் அதிவிரைவு ரயில்கள் (சூப்பர் ஃபாஸ்ட்) சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகின்றன.
காலவிரயம், பணம் செலவு: தாம்பரம், செங்கல்பட்டு மற்றும்ஆவடியைச் சுற்றியுள்ள பகுதி களை சேர்ந்த மக்கள் மேற்கண்ட ரயில்களை பிடிக்க சென்ட்ரல் செல்ல வேண்டி உள்ளது. இதற்காக, குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. இதனால், கால விரயமும், கூடுதல் பணம் செலவும் ஏற்படுகிறது.
தற்போது, ஆவடியில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம், பூந்த மல்லி மற்றும் பெரும்புதூருக்கு செல்ல மாநகர பேருந்து வசதி உள்ளது. எனவே, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி வழியாக வெளி யூர்களுக்குச் செல்லும் ரயில்களும், வெளியூர்களில் இருந்து ஆவடி வழியாக சென்னை செல்லும் ரயில்களும் ஆவடியில் நின்று செல்ல வேண்டும்.
சென்ட்ரலில் நெரிசல் குறையும்: அவ்வாறு நின்று சென்றால் ஆவடி, அம்பத்தூர், பெரும் புதூர், தாம்பரம், வேளச்சேரி, வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அத் துடன், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏற்படும் நெரிசலும் குறையும்.
ஏற்கெனவே, பெரம்பூர் ரயில் நிலையத்தில் 90 சதவீதம் ரயில்கள் நின்று சென்னைக்கு செல்கின்றன. அதேபோல், ஆவடி ரயில் நிலையத்திலும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஆவடி ரயில் நிலையத்தை 4-வது முனையமாக தரம் உயர்த்தி, அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.