விழுப்புரம்: திருவெண்ணை நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மயில் முருகன் என்பவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பது: என் மனைவிக்கு இதயம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. தற்போது உயர் சிகிச்சை அளித்து மருத்துவம் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். என், மனைவிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் தரப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் பார்வைக்கு இக்கோரிக்கை வைக்கப்பட்டு, என் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என் மனைவியைக் காப்பாற்ற மாதம் ரூ.30 ஆயிரம் செலவாகிறது. என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் வாழ்வின் கடைசி விளிம்பில் உள்ள எனக்கு, முதல்வரின் நிவாரணத் தொகை வழங்கிட பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அம்மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயர் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல் வரை கேட்டுக்கொண்டார். மேலும் சிறிது நிதி உதவியும் அளித்து, அரசு சார்பில் மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என மனுதாரர் மயில் முருகனுக்கு நம்பிக்கையூட்டினார்.
இது குறித்து மயில் முருகனிடம் கேட்டபோது, “நான் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். கடந்தாண்டு ஜனவரி மாதம் என் மனைவி சிவகலா மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். அங்கு, ‘நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல் நிலை இல்லை’ என்று கூறிவிட்டனர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலமே அவர் சுவாசிக்கிறார். ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் மருத்துவச் செலவுகள் மாதம் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுப்பதாக கூறியுள்ளனர். எங்களுக்கு ப்ளஸ் டூ படிக்கும் சுபாஷிணி ( 18 ), ப்ளஸ் ஒன் படிக்கும் அனுஹாசினி ( 16 ), 9-ம் வகுப்பு படிக்கும் தேவிபிரியா ( 13 ), 6-ம் வகுப்பு படிக்கும் ரியாசினி ( 11 ) ஆகிய பெண் பிள்ளைகள் உள்ளனர்.
என் மனைவியை உடன் இருந்து கவனித்து கொள்வதால், நான் வேலைக்கு செல்வதில்லை. தமிழக அரசு நிவாரண உதவி அளித்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரி வித்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல் நிலை இல்லை என்று கூறிவிட்டனர்.