உதகை: உதகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் படத்தை அதிமுகவினர் காலணிகளால் அடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆ ராசா. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். சமீப காலமாக ஆ.ராசா பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி ஆ.ராசா பேசியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவை சேர்ந்தவர்கள் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், உதகையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக நகர செயலாளர் சண்முகம் தலைமையில் கட்சியினர், திடீரென ஆ.ராசாவின் உருவப்படத்தை எடுத்து வந்து, அதைக் கிழித்தும், கீழே போட்டு மிதித்தும், காலணிகளால் அடித்தும் அவமதிப்பு செய்தனர். மேலும், ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.