கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மல்லப்பாடி-மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே ரூ.2.34 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மல்லபாடி கிராமத்திலிருந்து மரிமானப்பள்ளி, காவேரி நகர், வி.கே.நகர், நாயுடு கொட்டாய், முஜூநாயுடு கெட்டாய் மற்றும் ஜிட்டிகானூர், முண்டிகானூர், மஸ்திகானூர் ஆகிய கிராமங்களுக்கு அப்பகுதியில் உள்ள பாம்பாற்றை கடந்து செல்லும் நிலையுள்ளது.
மழைக் காலங்களில் பாம்பாற்றில் தண்ணீர் செல்லும் போது ஆற்றைக் கடந்து செல்வதில் மக்கள் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இச்சிரமத்தைப் போக்க ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இப்பிரச்சினை தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 2023 செப்டம்பர் மாதம் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மல்லப்பாடி-மரிமானப்பள்ளி பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நபார்டு திட்டத்தின் (2023-24) கீழ் ரூ.2 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்குத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில், பாலம் கட்டும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். ஆட்சியர் கே.எம்.சரயு, செல்லகுமார் எம்பி, எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுதொடர்பாக காவேரி நகரைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் உள்ளிட்ட சிலர் கூறியதாவது: எங்கள் ஊரிலிருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிக்கு மழைக் காலங்களில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது ஆற்றைக் கடந்து செல்வதில் சிரமம் இருந்து வருகிறது.
இதுபோன்ற நேரங்களில் சிப்காட், அச்சமங்கலம் கூட்டுரோடு வழியாக அல்லது கப்பல்வாடி, சிகரலப்பள்ளி, சக்கில்நத்தம், மல்லபாடி வழியாக பர்கூருக்கு சுமார் 10 முதல் 15 கிமீ சுற்றிச் செல்ல வேண்டி நிலை உள்ளது.
தற்போது, உயர்மட்ட பாலம் கட்டப்படுவதால், சிரமமின்றி ஆற்றைக் கடந்து செல்ல வழி கிடைக்கும் என்பதால், மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழாவில், கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், பர்கூர் பேரூராட்சித் தலைவர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.