தமிழகம்

ஐந்து தமிழர்கள் மரணத்தில் தமிழக அரசின் மெத்தனம் கண்டனத்துக்குரியது: முத்தரசன்

செய்திப்பிரிவு

செம்மரக் கடத்தல் என்ற பெயரால் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்டுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு சிறிதும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

ஐந்து தமிழர்கள் மரணம் குறித்த உண்மையை அறிய பணியிலிருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் ஓண்டிமிட்டா பகுதியில் உள்ள குறைந்தளவு தண்ணீர் உள்ள ஏரியில் சேலத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிர் இழந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன், முருகேசன், ஜெயராஜ் மற்றொரு முருகேசன் மற்றும் சின்னையன் ஆகியோர் குறைந்த வயதுள்ளவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்பது நம்பும்படியாக இல்லை.

இடுப்பளவு தண்ணீர் கூட இல்லாத ஏரியில் மேற்கண்டவர்கள் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக ஆந்திர மாநில காவல்துறையினரால் கூறப்படுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இருபது தமிழர்களை ஒரே நேரத்தில் ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற கொடூரத்திற்கு இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை.

செம்மரக் கடத்தல் என்ற பெயரால் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்டுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளன.

செம்மரக் கடத்தலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யபடுவதில்லை. அத்தகைய சமூக விரோதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள்,அரசியல்வாதிகள் போன்றவர்களின் அரவணைப்பில் இன்றுவரை பாதுகாப்புடன் தங்களது தொழிலை தங்கு தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அப்பாவி தமிழ்மக்கள் தொடர்ந்து துன்ப துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சிறிதும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படும் கூற்றை ஏற்க இயலாது, இதன் உண்மையை அறிய பணியிலிருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதுடன், உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை ஆந்திர அரசிடமிருந்து பெற்றுத்தர முன்வரவேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT