சென்னை: அபாயகரமான நிலையில் உள்ள மின்பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என பெரம்பூர், அருந்ததி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையின் பெரிய தொகுதி மற்றும் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. தொழில் நகரமாக இருந்து வரும் இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பெரம்பூருக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிருக்கும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இப்பகுதியில் போலெரி அம்மன் கோவில் தெரு உட்பட 16 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் மின்பெட்டிகள் திறந்தும், ஆபத்தான முறையில் மின் கம்பிகள் ஆங்காங்கே செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறுகலான தெருக்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற மின்பெட்டிகளை சீரமைக்காவிட்டால் மின்விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அருந்ததி நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம், ஃபியூஸ் மாற்றுவதற்கு கூட சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்வாரிய அதிகாரிகள் தாமதம் செய்வதால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பி.பரந்தாமன் கூறியதாவது: திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட அருந்ததி நகரின் 16 தெருக்களிலும் மின் விநியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. வீரராகவன் தெரு, தாசர் தெரு, வரதப்பன் தெரு போன்ற இடங்களில் உள்ள மின்பெட்டிகளில் ஏராளமான மின் கம்பிகள் வெளியில் எட்டிப்பார்த்தபடி அபாயகரமாக காட்சியளிக்கின்றன.
இதைத் தவிர மற்ற அனைத்து தெருக்களிலும் மின்பெட்டியில் இருந்து ஏதாவது ஒரு மின்கம்பியாவது அச்சுறுத்தும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை சீரமைக்குமாறு கோரிக்கை வைத்தால், கேபிள், ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதாக பொறுப்பு அதிகாரி கூறுகிறார். மேலதிகாரிகளிடம் கூறினால் மீண்டும் பொறுப்பு அதிகாரிகளிடம் அறிவுறுத்துவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், பணிகள் எதுவுமே நடந்தபாடில்லை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. மின்பெட்டியில் ஃபியூஸ் போடுவதற்கு கூட உடனே மின்வாரிய பணியாளர்கள் வருவதில்லை. இதுதொடர்பாக புகாரளிக்க தொலைபேசி அழைப்பையும் எடுப்பதில்லை. தலைமையகத்தில் உள்ள மின்னகத்தையும் உடனடியாக அணுக முடிவதில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கொசுத் தொல்லையால் அவதியடைகின்றனர்.
அண்மையில் கனமழை வெள்ளத்தின்போது மிக தாமதமாகவே மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது. இதற்கு மின்பெட்டி தாழ்வாக அமைந்திருப்பதே காரணம். எனவே, மின்பெட்டியை உயர்த்தி அமைக்க வேண்டும். கொரட்டூர் பகுதியில் மின்பெட்டிகள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்து நீர் தேங்கினாலும் மின்விநியோகம் பாதிக்கப்படாது.
அதேநேரம், தரமான கேபிள்கள் அமைக்கப்படுவதில்லை. மின் கட்டணம் செலுத்த தாமதமானால் இணைப்பை துண்டிப்பது, அபராதம் விதிப்பது போன்றவற்றில் தீவிரம் காட்டும் வாரியம், கோரிக்கைக்கு தீர்வு காண்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மின்வாரிய உயரதிகாரிகள் கூறும்போது, "தமிழகம் முழுவதும் பல மாதங்களாக மின்பெட்டியை உயர்த்தி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இப்பகுதியிலும் தாழ்வாக உள்ள மின் பெட்டிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், மின்னகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்படுகிறது. அதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. போதிய கேபிள்கள் கையிருப்பில் உள்ளன. இதனைக் கொண்டு தேவையான இடங்களில் கேபிள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டனர்.