ஓசூர்: முகூர்த்தம் மற்றும் பண்டிகை இல்லாத நிலையில் மகசூல் அதிகரிப்பால், ஓசூர் மலர் சந்தையில் பூக்கள் விலையும், விற்பனையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, பட்டன் ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மேலும், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் விற்பனையை மையமாக கொண்டும் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்லும்.
இதனால், ஓசூர் மலர் சந்தையில் வியாபாரம் பரபரப்பாக இருக்கும். தற்போது, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் வருகை குறைந்து மலர் சந்தையில் வழக்கமான பரபரப்பின்றி நேற்று வெறிச் சோடி காணப்பட்டது. மேலும், பூக்கள் விற்பனையும், விலையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சரிந்த பூக்களின் விலை: ஓசூர் மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையின் போது ஒரு கிலோ சாமந்தி ரூ.180-க்கு விற்பனையானது நேற்று ரூ.30 முதல் 50-க்கும் விற்பனையானது. இதேபோல மற்ற மலர்களின் விலையும் குறைந்துள்ளது. மற்ற பூக்களின் விலை ( அடைப்பு குறியில் பழைய விலை ) விவரம்: பட்டன் ரோஜா ரூ.20 ( ரூ140 ), சம்பங்கி ரூ.20 ( ரூ.140 ), செண்டுமல்லி ரூ.20 ( ரூ.60 ), குண்டு மல்லி ரூ.800-க்கும் ( ரூ.1,700 ) விற்பனையானது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையின் போது பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால், கடந்தாண்டு பொங்கலை விடக் குறைவான விலைக் குத்தான் பூக்கள் விற்பனையானது. ஓசூர் மலர் சந்தைக்குச் தினசரி 200 டன் வரை மலர்கள் வந்த நிலையில், தற்போது, மகசூல் அதிகரிப்பால் 400 டன் வரை விற்பனைக்கு வருகிறது. முகூர்த்தம் மற்றும் பண்டிகை இல்லாததால், கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. மேலும், விலையும் குறைந்துள்ளது. இதனால், வருவாய் இழப்பைச் சமாளிக்க கிடைத்த விலைக்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகளிடம் பூக்களை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.