மதுரையில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன். 
தமிழகம்

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன்

செய்திப்பிரிவு

மதுரை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் அக்கட்சியினரிடம் பேசினார்.

மதுரையில் பாஜக சார்பில் மோடி 3.0 நிகழ்வு நடைபெற்றது. இதில் ராம.சீனிவாசன் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும். மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகாசி ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லவும், சாத்தூரில் தீப்பெட்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தை காத்து, மீண்டும் அந்த தொழிலை மீட்டு கொடுத்துள்ளோம்.

பட்டாசு தொழிலுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில், உச்ச நீதிமன்றம் வரை சென்று தடையை நீக்கினோம். வீரன் அழகு முத்துகோன் தபால் தலை வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியது பாஜக விருதுநகரில் ரூ.2000 கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வரப்பட்டுள்ளது. தேவேந்திரர் அரசாணை பெற்று தந்துள்ளோம். தமிழகத்துக்கு பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் பாஜகவினர் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை மாவட்டத் தலைவர்கள் மகா. சுசீந்திரன், ராஜசிம்மன், சசிக் குமார், ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜன், சமூக ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத், மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத், மதுரை கிழக்கு மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செல்வ மாணிக்கம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT