காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன் துணைவேந்தர் க.ரவி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வீ.காமகோடி உள்ளிட்டோர். படம்: எல்.பாலச்சந்தர் 
தமிழகம்

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்பு: உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கினார். இவ்விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் புறக் கணித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணைவேந்தர் க.ரவி வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வீ.காமகோடி பேசும்போது, ‘‘கிராமப்புற இளைஞர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தினால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண வழிஏற்படும். செயற்கை நுண்ணறிவு,தரவு அறிவியல் துறை முக்கியத்துவம் பெற்றுவருகிறது. வரும்கல்வியாண்டில் (2024-25) இருந்துசென்னை ஐஐடியில், மாணவர்கள் சேர்க்கையில் விளையாட்டுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப் படும்’’ என்றார்.

இவ்விழாவில் 40,414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர், தங்கப் பதக்கம் மற்றும் தரவரிசையில் இடம்பெற்ற 184 பேர் என 348 பேருக்கு ஆளுநர் நேரடியாகப் பட்டங்களை வழங்கினார்.

பின்னர், பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மார்பளவுச் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

உயர் கல்வி அமைச்சர் புறக்கணிப்பு: அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

அதேநேரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தன்னவாசல் வருகை ரத்து: இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருகை ரத்து செய்யப்பட்டது.

காரைக்குடி அழகப்பா பல்கலை.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தைப் பார்வையிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டியாவயல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய சூழலில், சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருவதாகஇருந்த நிகழ்வு, நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல ஆளுநர் திட்டமிட்டிருந்ததாகவும், காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புறப்பட காலதாமதம் ஆனதால், சித்தன்னவாசல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT