நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ள நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கமல்ஹாசன் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. அவர் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவராக சென்றுபார்த்து கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார். நான் அரசியல் பயணம் செல்கிறேன் என்னை வாழ்த்துங்கள் என அவரே கேட்பது சரியல்ல. ஆரம்பமே சரியில்லாமல் இருக்கிறது. இதுவரைக்கும் கட்சித் தொடங்கியவர்கள் யாருமே மாற்று கட்சித் தலைவர்களை சந்தித்து எனக்கு ஆதரவு கொடுங்கள் எனக் கேட்டதில்லை. இது ஒரு கேலிக்கூத்தாகவே முடியுமே தவிர அரசியல் கட்சியாக விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பில்லை" என்றார்.
தமிழகம் பயங்கரவாதிகளை உருவாக்கும் கூடமாக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே என நிருபர்கள் கேள்வி எழுப்ப, "தமிழகத்தில் இருந்த ரவுடிகள் எல்லாம் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஹாசினி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தஷ்வந்தை மும்பை வரை சென்று தமிழக போலீஸார் பிடித்து வந்தனர். அண்மையில்கூட ராஜஸ்தான் கொள்ளையர்களை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். முதல்வர் பழனிசாமி தலைமையில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் விமர்சனமாக இதை பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கலாமே தவிர அவருக்கே உண்மை என்னவென்பது தெரியும்" என்றார்.
அரசியல் ஒரு சாக்கடை என அழகிரி விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "அரசியலை கங்கையாகப் பார்த்தால் கங்கை, சாக்கடையாகப் பாவித்தால் சாக்கடை. இதே அரசியலைக் கொண்டுதான் காந்தியும், சுபாஷ் சந்திர போஸும் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தனர். அழகிரி விரக்தியில் இப்படி பேசுகிறார்" என்றார்.