சேலம்: சேலம் மொத்த சந்தையில் வழக்கத்துக்கு மாறாக, ஜனவரி மாதத்தில் பூண்டு விலை கிலோ ரூ.320 என அதிகரித்துள்ளது. அறுவடைக் காலம் தொடங்கி விட்ட நிலையிலும், பூண்டு விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அன்றாட சமையலில் பயன் படுத்தப்படும் விளை பொருட்களில் ஒன்று பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் முக்கிய இடங்களில் ஒன்றாக சேலம் இருந்து வருகிறது.
சேலத்தில் லீ பஜார், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பூண்டு மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில், சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே காணப்படுகிறது.
இது குறித்து பால் மார்க்கெட் மொத்த வியாபாரிகளில் ஒருவரான சாகுல் கூறியது: தமிழக மக்கள் பயன்படுத்தும் பெருமளவிலான பூண்டு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை செய்யப்படும். எனவே, சேலம் மொத்த சந்தைக்கு பொங்கலுக்குப் பின்னர் வட மாநிலங்களில் இருந்து பூண்டு மூட்டைகள் அதிகமாக கொண்டு வரப்படும்.
அறுவடை செய்யப்பட்டு உடனே சந்தைக்கு வரப்படுவதால், பூண்டுகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். வரத்து அதிகம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக, ஜனவரி பிற்பகுதியில் பூண்டு விலை சரிவடைந்துவிடும். மார்ச் இறுதி வரை வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் பூண்டு கிலோ ரூ.100-க்கும் கீழே குறைந்துவிடும். சேலம் மொத்த சந்தையில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட பின்னரும், வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக, சந்தைக்கு பூண்டு வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, வட மாநிலங்களில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சந்தை கூடியபோதும், பூண்டு வரத்து குறைவாகவே இருந்தது. அறுவடை காலத்தில் சேலம் சந்தைக்கு வரக்கூடிய அளவில், தற்போது 4-ல் 1 பங்கு அளவுக்கு தான் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது.
தேவை அதிகமாக இருக்கும் நிலையில், வரத்து குறைவாக இருப்பதால், சேலம் மொத்த சந்தையில் சில தினங்களுக்கு முன்னர் கிலோ ரூ.290 ஆக இருந்த பூண்டு விலை தற்போது கிலோ ரூ.320 ஆக உயர்ந்தது. அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட பின்னர் கிலோ ரூ.300-க்கு மேல் பூண்டு விலை இருப்பது, வியப்பளிக்கிறது. பூண்டு விலை அதிகரிப்பினால், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும், பங்குச் சந்தை போல, பூண்டு மூட்டைகள் வரத்துக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும்.
அறுவடைக் காலம் தொடங்கி ஓரிரு வாரங்களே ஆகியிருப்பதால், இனி பூண்டு மூட்டை வரத்து அதிகரித்து, விலை குறைந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்றார்.சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட்டில் உள்ள பூண்டு மொத்த விற்பனைக் கடையில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு இருக்கும் பூண்டு மூட்டைகள். படம்: எஸ்.குரு பிரசாத்