புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலராக இருந்த ராஜீவ் வர்மா சண்டி கருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாசல பிரதேசத்தில் இருந்து சரத் சவுகான் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை மாநில தலைமைச் செயலராக ராஜீவ் வர்மா உள்ளார். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஆளும்கட்சி கூட்டணி எம்எல்ஏக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைமைச் செயலரின் செயல்பாடுகளை எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்தனர். பேரவைத்தலைவர் செல்வமும், “அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே முக்கிய அரசு செயலர் மாற்றத்தில், முதல்வர் ரங்கசாமியை தலைமைச் செயலர் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. முதல்வர் ரங்கசாமியும் பேரவையிலேயே, இதுதொடர்பான விவகாரத்தில் தலைமைச் செயலர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஆட்சியர் வல்லவன் கோவாவுக்கு மாற்றம்: புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் (2011 பேட்ஜ்) கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த இவர், முதல்வருக்கு நெருக்கமாக இருந்து வந்தார். இவரை மத்திய அரசு திடீரென மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் ஐஏஎஸ் அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய் ( 2012 பேட்ஜ் ) புதுச்சேரியில் இருந்து சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி தல்வாடே ( பேட்ஜ் 2009 ) புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் (பேட்ஜ் 2018) அந்தமான் நிகோபாரில் இருந்து புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு ஐபிஎஸ் அதிகாரி அஜித் குமார் சிங்லா (2004 பேட்ஜ்) என்பவரும் மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே, பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல், பொங்கல் பணத்தொகுப்பு வழங்குவது என பல விஷயங்களிலும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
ஒரு கட்டத்தில் இதற்கான கோப்புகளை, தலைமைச் செயலரைத் தாண்டி தானே எடுத்து வந்து ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி கையெழுத்து வாங்கி செயல்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமைச் செயலரை மாற்ற முதல்வர் தரப்பில் இருந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இந்தச்சூழலில், தற்போது புதுச்சேரிதலைமைச் செயலர் மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், “புதுச்சேரி தலைமைச் செயலராக இருக்கும் ராஜீவ் வர்மா ( பேட்ஜ் 1992 ) தற்போது சண்டிகர் நிர்வாகியின் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் அருணாசல பிரதேசத்தில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சரத் சவுகான் ( பேட்ஜ் 1994 ) புதுச்சேரி தலைமைச் செயலராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதல்வரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.