புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.29) நடந்தது. அப்போது, மார்ச் 4-ம் தேதிக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
பொன்முடி சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “பொன்முடி அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தவர். தேர்தல் வேறு நெருங்குகிறது என்பதால் அவருக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என முறையீடு செய்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “அவசரம் வேண்டாம். மேல்முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கட்டும். அவர்கள் பதிலளிக்கும் வரை தண்டனையை நிறுத்திவைக்க போவதில்லை” என்று கூறி இடைக்கால தடை விதிக்க மறுத்தது. மேலும் வழக்கை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பின்னணி: உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன.
எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.