சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய பொது இயக்க அட்டை கட்டண விகிதத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பயணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, 2024-ம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பேரை அடையாளம் கண்டு பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை திரு.வி.க.பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், கடந்த டிச.15 முதல் ஜன.14-ம் தேதி வரை அதிகமுறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் பெனுதர் பர்ஹி உள்பட பலர் கலந்துகொண்டனர்.