ஆர்எஸ்எஸ்-ன் சக் ஷம் அமைப்பின் 5-வது மாநில மாநாடு மகாகவி பாரதி நகரில் உள்ள மதி என்டிஜேஏ விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறையில் சாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன், மயிலாப்பூர் ராம கிருஷ்ண மடத்தின் மாணவர் இல்ல செயலர் சத்ய ஞானானந்தா மகராஜ், மருத்துவர் நளினி பார்த்தசாரதி, முன்னாள் மாவட்ட நீதிபதி கே.அருள், சக் ஷம் அமைப்பின் தேசிய தலைவர் எஸ்.கோவிந்தராஜ், மாநில தலைவர் சபாஷ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

மாற்றுத் திறனாளிகள் நலனை பெரிதும் பாதுகாக்கும் பிரதமர் மோடி: தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: நரேந்திர மோடி பிரதமரான பிறகு, மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தெரிவித்தார்.

சென்னை மகாகவி பாரதி நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஆர்எஸ்எஸ் மாற்றுத் திறனாளிகள் பிரிவான ‘சக்‌ஷம்’ அமைப்பின் 5-வது மாநிலமாநாடு நேற்று நடந்தது. இதில், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன், மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மாணவர் இல்ல செயலர் சத்ய ஞானானந்தா மகராஜ் பங்கேற்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வட்டியில்லா கடன் வழங்கி வரும் பத்மநாபன், 120 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள தொழில் முனைவோர் அறிவுராஜா மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் என சாதனை படைத்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

பின்னர், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் குறைபாடு மட்டுமே உள்ளது. ஆனால், மனக் குறைபாடு இல்லை. மற்றவர்களைவிட அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கிறது.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தார். மாற்றுத் திறனாளிகள் நலன் காக்கும் தலைவராக அவர் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற முன்னாள் பதிவாளர் அருள், ஜிப்மர் மருத்துவமனை முன்னாள் குழந்தைகள் நல மருத்துவ பேராசிரியர் நளினி பார்த்தசாரதி, சிறப்புஒலிம்பிக் பாரத் போர்டு துணை தலைவர் சித்ரா ஷா, டிடிஏ நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.சேது, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர் அரவிந்த், சக்‌ஷம் அமைப்பின் தேசிய தலைவர் கோவிந்தராஜன், மாநிலத் தலைவர் சபாஷ் ராஜ், செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT