சென்னை: இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமையகத்தில் நேற்று தொடங்கியது.
தேசிய குழு கூட்டத்தின் முதல் நிகழ்வாக சங்கத்தின் கொடியை முன்னாள் எம்.பி. நாகேந்திரநாத் ஓஜா ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை சங்கத்தின் அகில இந்திய தலைவர் நா.பெரியசாமி தலைமையேற்று வழி நடத்தினார்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், கேரள மாநில முன்னாள் அமைச்சர் இஸ்மாயில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் சீ. தினேஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
தேசிய அரசியல் நிலை மற்றும் விவசாய தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து நாகேந்திரநாத் ஓஜா விரிவாக எடுத்துரைத்தார். முதல் நாள் கூட்ட அமர்வின் நிறைவில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.பாஸ்கர் நன்றி கூறினார்.
இன்று அரசியல் நிகழ்வுகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.
தொடர்ந்து அரசியல் தீர்மானம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, நாளைய தினம் தீர்மானங்களும், முடிவுகளும் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில், தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், மத்திய பிரதேசம், பிஹார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.