ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், அஞ்சல்துறை சார்பில், அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைவர் (மெயில் மற்றும் வணிக மேம்பாடு) தேவி (வலமிருந்து 3-வது) திறந்து வைத்தார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் (வலமிருந்து 2-வது) உள்ளிட்ட அலுவலர்கள் உடன் பங்கேற்றனர். 
தமிழகம்

ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், அஞ்சல்துறை சார்பில், அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதிக்கான சுங்க அனுமதியை ஆன்லைன் மூலமாக, இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் ஏற்றுமதி சேவை மையம் 2022 டிசம்பர் முதல் செயல்படுத்தி வருகிறது.

வணிக ஏற்றுமதியாளர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, எந்தத் தடையும் இல்லாமல் ஏற்றுமதி ஆர்டரைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் ஏற்றுமதிச் சந்தையின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில், அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக வட்ட அஞ்சல் அலுவலகம் சார்பில், கண்காணிப்பாளர் அலுவலகம், வெளிநாட்டு அஞ்சல், சென்னை- 600 001 என்ற முகவரியில் இந்த ஏற்றுமதி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைவர் (மெயில் மற்றும் வணிக மேம்பாடு) தேவி திறந்து வைத்தார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

சிறிய அளவிலான தொழில்முனைவோர், கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சந்தை குறித்து வழிகாட்டுவது, ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு மிகவும் நியாயமான விலையில் அனுப்பவும், நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் உதவுவதே இந்த சேவை மையத்தின் நோக்கமாகும்.

மேலும், இந்த மையத்தின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், சுய உதவிக் குழுவினர், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து ‘ஆன்-லைன்’ மற்றும் நேரடியாக பயிற்சிகளை நடத்தி ஏற்றுமதியாளர்களின் திறனை மேம்படுத்துவர்.

அத்துடன், இந்த சேவை மையம், ஏற்றுமதியாளர்களின் பதிவுக்குப் பிந்தைய தேவைகளுக்கான கண்காணிப்புப் பிரிவாக செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும், சுங்கத் துறை கோரும் ஆவணங்களை ஆன்லைன் மூலம் அப்லோடு செய்யவும் இந்த மையம் உதவி செய்யும்.

SCROLL FOR NEXT