திண்டுக்கல்: திருவள்ளுவர், திருக்குறளை விழுங்க நினைப்பதன் மூலம் தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, வரலாற்றை சிதைக்க முயற்சி நடக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதன் தொடக்கமாக பேகம்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்பு மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. மாநாட்டில் திருக்குறள் காட்சியகம், திருக்குறள் அறி ஞர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டு அமைப்பாளர் கழராம்பன் வரவேற்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: உலகில் அனைவருக்கும் பொதுவான திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மாற்ற முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப் படுகிறது. புத்த மதத்தைத் தழுவிய அம்பேத்கரை இந்து மதத்தின் காவலர் என்று கூறுகின்றனர். திருக்குறள், புத்தர் மற்றும் அம்பேத்கரை விழுங்கி செரிக்கப் பார்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
திருவள்ளுவர், திருக்குறளை விழுங்க நினைப்பதன் மூலம் தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, வரலாற்றை சிதைக்க முயற்சி நடக்கிறது. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று பேசினார். திரைப்பட இயக்குநர் வி.சேகர், திண்டுக்கல் மேயர் இளமதி, திருவள்ளுவர் இலக்கியப் பேரவை தலைவர் முருகய்யா, செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.