தமிழகம்

“தமிழக கிராமங்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் வந்து சேரவில்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழக கிராமங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

நாகையில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாகை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று, பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலை மாற வேண்டும். கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன். 55 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்னும் அங்கு நிழலாடிக் கொண்டிருக்கிறது.

நம் மாநிலத்தின் தனி மனித ஆண்டு வருமானம் ரூ.2.75 லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இங்குள்ளவர்களின் ஆண்டுவருமானம் ரூ.40 ஆயிரமாகத்தான் இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது குறைந்த காலத்தில் நமதுஏழ்மை ஒழிந்துவிடும் என்று நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நினைத்தார்கள். ஆனால், தற்போது வரை பல பகுதிகள் ஏழ்மையில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பிறகு சிலர் பணக்காரர்கள் ஆனார்கள். சிலர் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். சிலர் ஏழ்மையைப் பற்றி பேசிப் பேசியே பணக்காரர்களாக இருக்கின்றனர். தற்போதுள்ள ஏழ்மையைக் கொண்டு ஒருபோதும் வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க முடியாது. நம் நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. மனிதர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம்.

மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கியே வீரநடை போட்டு வருகிறது. இந்த புதிய அவதாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், அவை இங்குள்ள கிராமங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை என தெரிகிறது. அவர்கள் வீடு என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுபோல, மத்திய அரசின் பல திட்டங்கள் இங்குள்ள கிராமங்களுக்கு முறையாக வந்து சேர்ந்திருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்குள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. இவர்களின் பங்களிப்பு இருந்தால் நம் நாட்டை 25 ஆண்டுகளில் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT