சென்னை: மக்களவைத் தேர்தல் பணிகளைஒருங்கிணைக்கவும், மேற்பார் வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24-ம் தேதி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் மக்கள வைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், சரி செய்ய வேண்டிய பிரச்சினைகளை, திமுகவினரிடையே நிலவும் அதிருப்தி குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக குழுவினர் கேட்டனர்.
அதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின்பேசும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் சேலம் திமுக நிர்வாகிகளில் சிலர் அதிமுகவினருக்கு ஆதர வாக செயல்படுவதாக புகார் வருகிறது. சேலம் திமுகவில் சரியாகச்செயல்படாதவர்கள், மறைமுகமாக கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் திமுக நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைக் கைவிட்டு, கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் இந்தியாவுக்கேமுக்கியமான தேர்தல். தமிழகத்தைக் காக்க ஓரணியில் நின்று தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். வெறுப்பையும், வேற்றுமையையும் விதைப்பவர்களை விரட்ட இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம்’’ என்றார்.
தொடர்ந்து மாலையில் நீலகிரி,திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிப்.5-ம் தேதி வரை தொகுதிவாரியாக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடைபெற வுள்ளது குறிப்பிடத்தக்கது.