தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகப் பிரம்ம மகோத்சவ சபா சார்பில் தியாகராஜரின் 177-வது ஆண்டு ஆராதனை விழா நேற்று தொடங்கியது. சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார்.
தலைமை வகித்து சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: தியாகராஜ சுவாமிகளின் புகழையும், கர்னாடக இசையையும் உலகம் முழுவதும் பரப்புவதுதான் இந்த விழாவின் நோக்கம். இதனடிப்படையில் தொடர்ந்து ஆராதனை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ஆராதனை விழா 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அயோத்தியில் பால ராமர் ப்ராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த புனித மாதத்தில், ராமபிரானின் தீவிர பக்தரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுவது பெரும்பாக்கியம். ஒவ்வோர் ஆண்டும் இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள், ரசிகர்களின் ஒருங்கிணைந்த முயற்சிதான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவைத் தொடங்கிவைத்து சிட்டி யூனியன் வங்கித் தலைவர் என்.காமகோடி பேசியதாவது: ராமரை பார்த்ததாகக் கூறியவர் தியாகப் பிரம்மம்தான். அந்த அனுபவங்களை அவர் பதிவு செய்துள்ளார். ராம நாமத்தை 96 கோடி முறை ஜபம் செய்தால், ராமரைப் பார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர் தியாகராஜ சுவாமிகள். தியாகப் பிரம்ம மகோத்சவம் பாரத தேசத்தின் முக்கியமான சொத்து. இதில் பங்கேற்பது மிகவும் பெருமைக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
சபாவின் மற்றொரு செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றிகூறினார். காயத்ரி வெங்கட்ராகவனின் பாட்டுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது.