சென்னை: பாஜக தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை கமலாலயத்தில் பாஜக சார்பில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கட்சியின் மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பது குறித்து கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஆனால், அதற்குமுன்பாக ஏராளமான பணிகள் உள்ளன. வரும் 28-ம் தேதி (நாளை) காலைதமிழகத்தின் மாநில தேர்தல் பணிஅலுவலகம் திறக்கப்பட உள்ளது. ஏற்கெனவே, நிறைய பகுதிகளில் மக்களவைத் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்காக ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் குழு அமைக்கப்பட்டு, அவர்கள்தங்கள் பணிகளை தொடங்கிவிட்டனர்.
மேலும், பாஜக சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு, விவசாய மாநாடு நடத்த தொடங்கிவிட்டனர். பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டமும் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் பணிகளை முழு வீச்சில்மேற்கொள்வதற்காக, கட்சியின் தேசியதலைவர் நட்டா, பாஜவின் தேர்தல் பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார்.
அதேபோல, பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக கடந்த 25-ம் தேதி தொடங்கப்பட்டுவிட்டது. எப்போதும் போலவே தேர்தல் களத்தில் பாஜக முன்னதாகவே வேலையைத் தொடங்கி, வெற்றியை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்த நிலவரத்தை தேசிய தலைமை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக தகுந்த நேரத்தில் முடிவு செய்வார்கள்.
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை உடனடியாக கைதுசெய்யும் திமுக அரசு, திமுக எம்எல்ஏகுடும்பத்தினர் பட்டியலின பெண்ணுக்கு நிகழ்த்திய கொடுமைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்து,நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது. திருப்பூர் செய்தியாளருக்கு நடந்த கொடூரம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மோசமாக சென்று கொண்டிருப்பதற்கு உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்துக்கு பத்மபூஷன்: இதையடுத்து, விஜயகாந்த் மறைந்து 30-ம் நாளான நேற்று அவரதுநினைவிடத்துக்கு சென்ற வானதி சீனிவாசன், விஜயகாந்த் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர்கூறும்போது, "விஜயகாந்துக்கு இந்திய அரசின் சிறந்த குடிமக்களுக்காக வழங்கப்படக் கூடிய பத்மபூஷன்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான நேரத்தில், பொருத்தமான நபருக்கு விருதை அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி" என்றார்.