தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: ஏகனாபுரத்தில் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதை எதிர்த்து ஏகனாபுரம் மக்கள் 5-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கும் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தால், 2-வது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த ஏகனாபுரம் கிராமத்தை மையப் பகுதியாக வைத்து சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க, அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் விளை நிலங்கள் எடுக்க திட்டமிடப்பட்டது.

இந்த பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் 550-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் 13 கிராமத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT