சென்னை: நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள பல்வேறு கட்சித் தலைமை அலுவலகங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எச்.வி.ஹண்டே, கர்னல் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு நாகராஜன், மாநிலசெயலாளர் பிரமிளா சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தமிழ்செல்வன், வாசு,மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் வீரபாண்டியன், பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா, மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில்தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பி.எம்.ஆர்.சம்சுதீன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, தியாகராய நகரில் உள்ள சமக தலைமையகத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.மகாலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் அசோக்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினார்.