சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு பணிக் குழுக்களை அமைத்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் மக்களை சந்திக்கும்போது, அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் முக்கிய பங்காற்றும். அதனால் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஒவ்வொரு கட்சியும் முக்கிய கவனம் செலுத்தும்.
அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் பணிக் குழுக்களை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, ஓ.எஸ்.மணியன், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கஉள்ளனர். இதில், மக்களை கவரும் அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.