புதுச்சேரி: “முழுமையடையாத சட்டப்பேரவையை திறந்தவர்கள், ராமர் கோயில் திறப்பை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''புதுச்சேரியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படுகிறதோ, அந்த திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்துகொண்டு வரப்படுகிறது. இன்று அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதனால் அரசாங்கத்தை பாராட்டுகிறேன். புதுச்சேரி அரசு பள்ளிகளில் வெகு விரைவில் சிறுதானிய ஊட்டச்சத்து உணவு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உணவிலும், படிப்பிலும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று பல திட்டங்களை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
விக்ஷித் பாரத் என்ற வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது முற்றிலுமாக அரசாங்க நிகழ்ச்சி. தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் அப்படியா சொல்கின்றோம், இல்லையே. வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களுக்கு பயன்பெறும் வகையில் அப்போதே அந்த திட்டத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி. அது விளம்பர நிகழ்ச்சி அல்ல.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டம், இலவச கேஸ் திட்டம் கொடுக்கப்படுகிறது. விவசாய பயிர் காப்பீட்டு திட்டம் பதிவு செய்யப்படுகிறது. மக்களுக்கு கிடைக்கும் திட்டங்களை, அவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கின்றார்களா என்பது எனக்கு தெரியவில்லை. தமிழகத்தில் நான் முதல்வர் நிகழ்ச்சி திட்டமே, விக்ஷித் பாரத் திட்டம் தான். இது மக்கள் நிகழ்ச்சி தானே, இதில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
மக்களுக்கு எது கிடைத்தாலும் இவர்கள் எதிரானவர்களா? மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்தக்கூடாதா. இவர்கள் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகின்றேன். மக்களுக்கான நலனில் தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று எதிர்கட்சியினர் பட்டியல் கொடுங்கள். முதல்வர் பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலை திறந்தார்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் வருகின்றது.
உத்தரப் பிரேதசத்தில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வை நாம் பார்த்தோம். ராமர் கோயிலில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இங்கு நடந்த உத்தரப் பிரதேச மாநில உதய நாள் நிகழ்வில் அதனை நினைவுகூர்ந்தனர்.
கருணாநிதி புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை மன்மோகன் சிங்கை வைத்து திறந்தார். அப்போது அதற்கு கூரையே போடவில்லை. ஷெட் அமைத்து திறந்தனர். முழுமையடையாத சட்டப்பேரவையை திறந்தவர்கள் இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்ததை இப்படி கூறுகின்றனர். ராமர் கோயில் திறப்பையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிவா உள்ளிட்டோர் தயவு செய்து குடியரசு தின விழானை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். ஆளுநர் விருந்தை ஆளுநர் விருந்தாக பாருங்கள். அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்” என்றார்.
அப்போது தைப்பூச நிகழ்வுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கப்பட உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர், “ராமர் கோயில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்தியில் இருந்து ஒளிபரப்பப்பட்டது. எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்துவிடாதீர்கள். ராமர் வட இந்திய கடவுள் விடுமுறை அளிக்கின்றனர். தமிழ் கடவுளுக்கு விடுமுறை விடவில்லை என்று பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்.
புதுச்சேரியில் ரங்காமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கின்றோம். விடுமுறையை வைத்து பக்தியை எடைபோடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்” என்றார்.
அப்போது வரும் மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் “நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படியிருந்தால் நானே உங்களை அழைத்துச் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.