சிவகங்கை: மக்களவை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கடந்த காலங்களில் ப.சிதம்பரம் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தற்போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்பியாக உள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் தீவிர முயற்சி செய்து வந்தார். மக்களவைத் தேர்தலுக்குள் தலைவர் பதவி கிடைத்தால், எம்.பி.க்கு போட்டியிடாமல் இருக்கலாம் என நினைத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை செவிசாய்க்காததால் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அதற்காக கட்சி நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த தேர்தல்களை போன்று, இந்த முறையும் திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்குவது உறுதியாகிவிட்டது. மக்களவைத் தொகுதியில் உள்ள 1,873 வாக்குச் சாவடிகளிலும் ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அமைத்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கூட்டங்களை நடத்தி வந்தனர். அப்போதே நிர்வாகிகள் சிலர் பெயரளவில் பூத் கமிட்டி அமைத் திருப்பதை கண்டறிந்து, சரியான பட்டியல் தயாரிக்க வேண்டுமென தெரிவித்தனர்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த பூத் கமிட்டிபட்டியலில் இடம் பெற்றோரின் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, ஒரு குழு சரி பார்த்து வருகின்றது. அத்தோடு பூத் கமிட்டியில் இருப்பவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதேசமயத்தில் எதிர் கோஷ்டியாக செயல்படும் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆதரவாளர்களும் தனியாக பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வந்தனர். பொது இடங்களில் கார்த்தி சிதம் பரத்துக்கு எதிராக கடுமையாக பேசி வருகின்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் கார்த்தி சிதம்பரம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயிலில் கூடிய கூட்டத்தை விட, தைப்பூசத்துக்கு பழநியில் அதிகளவில் கூடுவர். இது வட இந்தியர்களுக்கு தெரியாது. தமிழகத்தை புரிந்து கொள்ளாமல், ராமர் கோயிலால் பலன் கிடைக்கும் என அரசியல் கணக்கு போடுகின்றனர். திமுக மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதை இளைஞர் அணி மாநாடு உறுதிப்படுத்தியது. அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் தனது பலத்தை காட்ட வேண்டும். நாட்டிலேயே காவல் நிலையங்களில் விசாரணையின்போது சித்ரவதை செய்யப்படுவது தமிழகத்தில்தான் அதிகம்” என்றார்.