சென்னை: பணிப்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார்.
இந்த பெண்ணை மெர்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் கடந்த 18-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக புகார் அளித்த இளம்பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். அதில், 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மேற்படிப்புக்கு பணம் தேவைப்பட்டதால் இடைப்பட்ட காலத்தில் வேலைக்கு சென்று அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பணிப்பெண் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன். அதன்படி, மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் எம்எல்ஏ மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.
அங்கு என்னை வீட்டு வேலை என்ற பெயரில் சூடு வைத்தனர். கரண்டியால் அடித்தனர். காலால் எட்டி உதைத்தனர். வாயில் இருந்து ரத்தம் வரும் வரை அடித்தனர். அவர்களது குழந்தை முன் வைத்தே கொடுமைப்படுத்தினர். குழந்தை எதுவும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக குழந்தை முன்பு பாட்டுபாட வேண்டும், நடனம் ஆட வேண்டும் என கூறினர். பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொன்னார்கள். மேலும், எனது படிப்பு சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு கிழித்து போட்டு விடுவதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் தீர்த்து கட்டிவிடுவோம் எனவும் மிரட்டினார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், புகாருக்கு உள்ளான எம்எல்ஏவின் மகனும், மருமகளும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை போலீஸார் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.