சென்னை: மக்களவை தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவில், கட்சியின் செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவரான அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் கேஆர்என் ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை இக்குழுவினர் நேற்று சந்தித்தனர். பின்னர், அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: மக்களவை தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது.
முந்தைய தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு, இதில் புதிதாக இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் இக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள், பல்வேறு தொழில் செய்வோர், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிவார்கள். பின்னர், சென்னையில் மீண்டும் கூடி, தேர்தல் அறிக்கையை முடிவு செய்வோம்.
இப்பணியை தொடங்குவதற்காக, முதலில் எந்தெந்த ஊர்களுக்கு செல்வது என்று பேசி முடிவெடுத்துள்ளோம். எந்தெந்த விஷயங்களை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பது என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும். கருத்து கேட்பதற்கான மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே பிப்.5-ம் தேதி தூத்துக்குடியில் கருத்துக்கேட்பு நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.