சென்னை: நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது இந்திய தேசிய ராணுவத்தில் அதிக வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதுபற்றி படிக்கவோ, பேசவோ தமிழகத்தில் யாரும் முயற்சி செய்யவில்லை.
நமக்கு தெரியாமல் நிறைய தியாகிகள் உள்ளனர். அவர்களை பற்றி அறிய நாம் முயற்சிப்பது இல்லை. அன்றைய காலத்திலேயே பெண்கள் படைப் பிரிவை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. அவரது வழியில், பிரதமர் மோடியும் ராணுவம், விமானப் படை, கடற்படையில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்துள்ளார்.
மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில், பிரிவினைவாத முயற்சியும் நடந்தது. இந்தியர்கள் அப்போது பிரிந்திருந்தனர். இந்திய தேசிய காங்கிரஸால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் மட்டுமே. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம்.
இந்திய வீரர்களை வைத்து ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போரிட்ட நேதாஜி, 1946-ம் ஆண்டில் இந்திய பெருங்கடலையே முடக்கி, ஆங்கிலேயரின் கடற்படையை தோற்கடித்தார். ஆங்கிலேயர்கள் செய்வதறியாது தவித்தனர். இனியும் இந்தியாவில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதால், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினர்.
இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்ட நேதாஜி பற்றி நாம் பெரிதாக பேசுவது இல்லை. சுதந்திர வரலாற்றில், நேதாஜி போன்றோரின் தியாகங்களை எப்படி இருட்டடிப்பு செய்ய முடியும். நேதாஜியின் பங்களிப்பு பற்றி நமது தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இனி ஆராய்ச்சி செய்து படிக்க தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இதில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் இடம்பெற்ற வீரர்கள் நாகய்யா, லட்சுமி கிருஷ்ணன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜே.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, நேதாஜி படத்துக்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரை பற்றிய 5 நிமிட ஆவணப் படம் திரையிடப்பட்டது. இந்திய தேசிய ராணுவப் படையில் (ஐஎன்ஏ) பணியாற்றிய வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளை ஆளுநர் கவுரவித்தார். நேதாஜி குறித்து பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ரத்த தான முகாம், புகைப்பட கண்காட்சியை ஆளுநர் திறந்து வைத்தார்.
வருகைப் பதிவால் சர்ச்சை: இதற்கிடையே நேதாஜி பிறந்தநாள் விழாவில் இளநிலை 3, 4-ம் ஆண்டு மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருந்தது. நிகழ்ச்சி அரங்கில்தான் வருகை பதிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியபோது, “விழாவில் 400 மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அவர்களுக்கு 2 மணி நேரம் பாட வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதை பயன்படுத்தி மாணவர்கள் வேறு எங்கும் சென்றுவிட கூடாது என்பதாலேயே, நிகழ்ச்சியில் வருகைப் பதிவு எடுக்கப்பட்டது. இதுவும் ஒருவித கற்பித்தல் நிகழ்ச்சிதான். இடம் பெரிதாக இருந்திருந்தால் அனைத்து மாணவர்களையும் அழைத்திருப்போம்” என்றார்.