திருச்சி: சேலம் திமுக இளைஞரணி மாநாடு`நமத்துப் போன மிக்சர்' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது: `என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
`மோடியை விட்டால் வேறு பிரதமரே இல்லையா ?' என்று கேட்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்கே.பி.முனுசாமி. அதிமுகவுக்கு எப்படி ஒரே ஒரு எம்ஜிஆர் இருந்தாரோ, அதேபோலத்தான் பாஜகவுக்கு ஒரே ஒரு மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு, ஜன்னல்கள் எல்லாம் திறந்தே இருக்கின்றன. யாரெல்லாம் மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கூட்டணிக்கு வரலாம்.
சேலம் திமுக இளைஞரணி மாநாடு என்பது நமத்துப் போனமிக்சர். அதை யாருமே சாப்பிடவில்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். 1980-ல் கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றதே அப்போதைய காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டுவர என்ன நடவடிக்கை எடுத்தது?
பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருக்க வேண்டும் என்றுமற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1996-ல் சட்டப்பேரவையில் அப்போதைய கல்விஅமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பேசும்போது, முதல்வராக இருப்பவர் பல்கலை. வேந்தராக இருந்தால் மாண்பு கெட்டுவிடும் என்று பேசியுள்ளார். அவர் பேசியது தவறு என்று உதயநிதி சொல்கிறாரா? நீட் எதிர்ப்புக்காக கையெழுத்து வாங்கிய அட்டைகள், சேலத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன.
ஒற்றைக் கட்சி ஆட்சியில் இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ஒற்றைக் குடும்பம்தான் ஆட்சியில் இருக்கக் கூடாது. இந்தியாவில் இனி ஒற்றைக் கட்சியான பாஜகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
மாநில உரிமைகளை மீட்போம் என்று கட்சி தொடங்கியதிலிருந்து பேசிவரும் திமுக, இதுவரை எதை மீட்டுள்ளது? தமிழகத்தை திமுக குடும்ப அடாவடித்தனத்திடமிருந்து மீட்பதே பாஜகவின் கொள்கை. `திமுக ஊழல் ஃபைல்ஸ்' குறித்தஆடியோக்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.