விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகியோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த ஆண்டு செப். 8-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. “விசாரணை சரியாகச் சென்றுவரும் நிலையில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.