நாகர்கோவில்/மதுரை: குமரி தேவாலய வளாகத்தில் நடந்த கொலை வழக்கு விவகாரத்தில், தலைமறைவாக உள்ள பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலையை கண்டித்துவரும் 26-ம் தேதி கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோட்டைச் சேர்ந்தவர் சேவியர் குமார்(45). அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரான இவர், நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், அங்குள்ள மிக்கேல் அதிதூதர் ஆலய பாதிரியார் இல்லத்தில் கடந்த 20-ம்தேதி சேவியர் குமார் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இது தொடர்பாக தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ்பாபு, பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜன.26-ல் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், ஆலய துணைத்தலைவர் ஜெஸ்டஸ் ரோக், வின்சென்ட் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பாதிரியார் ராபின்சன் உள்ளிட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தி, வரும் 26-ம் தேதி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மிக்கேல் அதிதூதர் ஆலய பாதிரியார் ராபின்சனை, பணியிலிருந்து விடுவித்து மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி உத்தரவுபிறப்பித்துள்ளார். சேவியர் குமாரின் கொலை சம்பவத்தைக் கண்டிப்பதுடன், குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கஒத்துழைப்பு வழங்கப்படும் எனகுழித்துறை மறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சேவியர் குமார்உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்த பின்னரே, உடலை வாங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
நீதிமன்றம் உத்தரவு: குமரி மாவட்டம் மைலோடு பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “உயிரிழந்த சேவியர் குமாரின்உடலை தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றுஒருவர் பிரச்சினை செய்துவருகிறார். அவரது உடலை கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "தேவாலயத்துக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால், மக்கள் எப்படி நிம்மதியுடன் பிரார்த்தனை செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
அரசுத் தரப்பில், “இறந்தவரின் உடலை எங்கு அடக்கம்செய்ய வேண்டும் என்று அவரதுகுடும்பத்தினர் விரும்புகிறார்களோ, அங்கு அடக்கம் செய்யலாம் என்று தேவாலயம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “கிறிஸ்தவ தேவாலயத்தில் கல்லறைத் தோட்டம் இல்லை. அங்கு புதிதாக உடல் அடக்கம் செய்யப்பட்டால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சொந்தமாக பொது கல்லறைத் தோட்டம் உள்ளது. அங்கு தாராளமாக அடக்கம் செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, “தேவாலயத்துக்குச் சொந்தமான பொது கல்லறைத் தோட்டத்தில், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். உடல் அடக்கத்துக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்க வேண்டும். இதை மீறி யாராவது பிரச்சினை செய்தால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.