பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த திமுக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், தனது முகநூல் பக்கத்தில் ராமர் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து பொள்ளாச்சி நகர பாஜக தலைவர் பரம குரு தலைமை யிலான அக்கட்சியினர், குமரன் நகரில் உள்ள தென்றல் செல்வராஜ் வீட்டுக்கு நேற்று ராமர் படத்துடன் சென்று முற்றுகையிட்டனர். பின்னர் ராமர் படத்தை கையில் வைத்த படி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு தென்றல் செல்வராஜ் குடும்பத்தினர், பெரியார் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பெரியார் வாழ்க என கோஷ மிட்டனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், தென்றல் செல்வராஜின் வீட்டுக்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து திமுக - பாஜகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பையும் தடுத்து நிறுத்திய மேற்கு காவல் நிலைய போலீஸார், வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நகர தலைவர் பரமகுரு உள்ளிட்ட 13 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். தகவலறிந்து தென்றல் செல்வராஜ் தலைமையில், காந்தி சிலை அருகே திமுகவினர் திரண்டனர்.
வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.