ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ( 48 ), ரமேஷ் ( 48 ) ஆகியோர் பிளம்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இருவரும் நேற்று பகல் 12 மணியளவில், சோழபுரம் - நடேசன் தெருவில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ள கழிவு நீர் தொட்டிக்குள் இருந்த நீர் மூழ்கி மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு சென்றனர். அப்போது, சுரேஷ் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணியில் ஈடுபட்டார். ரமேஷ், மோட்டார் உதிரி பாகங்கள் வாங்க, ஹார்டு வேர்ஸ் கடைக்கு சென்றார். இந்நிலையில், சுரேஷ், கழிவுநீர் தொட்டியில் பரவிய விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு தொட்டியில் மயங்கி விழுந்துள்ளார்.
சிறிது நேரத்தில், திரும்பி வந்த ரமேஷ், தொட்டிக்குள் மயங்கி கிடந்த சுரேஷை மீட்க தொட்டிக்குள் இறங்கிய போது, அவரும் விஷ வாயு தாக்கி மயங்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த ஆவடி, அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் சுரேஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. ரமேஷ் ஆபத்தான நிலையில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.