நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜ் பவனில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
தமிழகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்தநாள்: ஆளுநர் ரவி, அமைச்சர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. நேதாஜியின் பிறந்தநாள், தமிழக அரசு சார்பில்ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை கிண்டி ராஜ்பவனில் நேதாஜியின் உருவப் படத்துக்கு மலர் தூவி, ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கட்சித் தலைவர்கள் புகழாரம்: நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட தனது எக்ஸ் பதிவில், ‘‘நாட்டின் விடுதலைக்காக தன்னலமற்ற வீரர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் இந்திய ராணுவத்தைக் கட்டமைத்து, இந்தியசுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக துளியளவும் அச்சமின்றி போராடிய ஆளுமைமிக்க தேசத் தலைவர் நேதாஜியின் பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பதிவில், ‘‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எங்களது மனமார்ந்த அஞ்சலிகள். சுதந்திர இந்தியாவுக்கான போராட்டத்தில் அவரது அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் என்றென்றும் நினைவுகூரப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சமக தலைவர் ஆர்.சரத்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் நேதாஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT