சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகுக் கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணிடம் பறிக்கப்பட்ட செயின் சில நாட்கள் கழித்த அவர் வேலை பார்த்த கடைக்கே விற்பனைக்கு வந்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரெட்ஹில்ஸ் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெலினா. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தி முனையில் மிரட்டிய இருவர் அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து ஜெலினா போலீஸில் புகார் செய்தார். இந்நிலையில், செயினைத் திருடியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த லட்சுமி என்ற பெண்ணிடம் அதைக் கொடுத்து அடகுக் கடையில் அடகுவைத்து பணம் பெற்றுவருமாறு கொடுத்தனுப்பியுள்ளனர். அந்தப் பெண் ஜெலினா வேலை பார்த்துவந்த நகை விற்பனை மற்றும் அடகுக் கடைக்கே சென்றுள்ளார்.
ஜெலினாவிடம் நகையைக் கொடுத்து பணம் கேட்டுள்ளார். அந்த நகை தன்னுடையது போலவே இருந்ததால், சந்தேகம் ஏற்பட்டு ஜெலினா போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீஸர் உடனடியாக வந்து விசாரித்ததில் அது திருட்டு நகை என்பது தெரியவந்தது.
சூரி என்ற சுரேந்தர் (30) அவரது கூட்டாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயினைத் திருடியதை சோழவரம் போலீஸார் கண்டுபிடித்தனர். நகையை அடகுவைக்க வந்த லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.