புதுச்சேரி: ஜிப்மர் கிராம மருத்துவமனைக்கு ட்ரோன் விமானம் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்ய சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் மூலம் மண்ணாடிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலவழி மையத்துக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்தப் பரிசோதனை மாதிரிகளை விரைவாக சிறியரக ட்ரோன் விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் மண்ணாடிப்பட்டு எல்லைக் காளியம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது.
இதில், ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் சிறியரக ட்ரோன் விமானத்தில் அவசரகால சிகிச்சைக்கான மருந்துகளை வைத்து அரை மணி நேரத்திற்கு பறக்க வைத்து சோதனை செய்தனர். ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜ்குமார் சித்தரியா, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி மணிமொழி உள்ளிட்டோர் சோதனையை பார்வையிட்டனர். கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.
இதுபற்றி ஜிப்மர் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மத்திய அரசானது ஜிப்மரில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்துகிறது. ஜிப்மர் சுயசேவை பிரிவில் பணிபுரியும் இரு பெண் ஊழியர்கள் பத்து நாட்களுக்கு தொலைநிலை விமானி பயிற்சி வகுப்பை ட்ரோன் டெஸ்டினேஷன் குருகிராம் தளத்தில் முடித்தனர்.
ஜிப்மர் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் எதிர்காலத்தில் மருத்துவ நோக்கங்களுக்காக ட்ரோன் சேவைகளை பயன்படுத்த அதிகாரப்பூர்வ தொடக்கத்துக்காக இது அமைந்தது. அதன்படி புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் சுகாதார மையத்துக்கு அவசரகால மருந்துகளை ட்ரோனை பயன்படுத்தி வழங்க சோதனை முன்னோட்டத்தை நடத்திமுடித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.